திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ டி.ராஜாவுக்கு ‘பெரியார் ஒளி’ விருதுகள்

92 0

 சென்னையில் மே 28-ம் தேதி நடக்கும் விழாவில், சிபிஐ-எம்எல்பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருதும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கு ‘பெரியார் ஒளி’ விருதும் வழங்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த 2007-ம் ஆண்டு முதல்விசிக சார்பில் சமூகம், அரசியல்உள்ளிட்ட தளங்களில் பணியாற்றிய ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறோம். ஆண்டுதோறும் 7 விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது, சிபிஐ-எம்எல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், ‘பெரியார் ஒளி’ விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கும் வழங்கப்படுகிறது.

அதேபோல, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுவுக்கு ‘காமராசர் கதிர்’ விருது,டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது, பெங்களூரு சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகன் கோபாலுக்கு ‘காயிதேமில்லத் பிறை’ விருது, தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு ‘செம்மொழி ஞாயிறு’ விருது வழங்கப்பட உள்ளன.

விருது வழங்கும் விழா, மே 28-ம் தேதி சென்னையில் நடைபெறும். விருதாளர்களுக்கு பாராட்டு பட்டயச் சான்றிதழ் மற்றும் தலா ரூ.50 ஆயிரம் பொற்கிழி வழங்கப்படும்.

கர்நாடகாவில் காங்கிரஸை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அங்கு பாஜகவை ஆட்சியில் இருந்து மக்கள் இறக்குவார்கள் என நம்புகிறேன். மணிப்பூர் மாநிலத்தில் வெறுப்பு அரசியலை கட்டவிழ்த்து விட்டதன் விளைவாக மாநிலமே பற்றி எரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து எனது தலைமையில் சென்னையில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.