மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை பிரபல்யப்படுத்தவா சமுர்த்தி கொடுப்பனவு ?

142 0

மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் மக்கள் மத்தியில் செல்வதற்கான பாதையாக சமுர்த்தி போன்ற நலன்புரி வேலைத்திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்ற சந்தேகம் காணப்படுகிறது.

நலன்புரி கொடுப்பனவு திட்டங்களில் தலையிட அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க கூடாது  என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி  கொடுப்பனவு திட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சமூக பாதுகாப்பு தொடர்பான விடயத்துடன் நலன்புரி விடயங்கள் தொடர்புபடுகின்றன. தற்போது சமூக பாதுகாப்புக்கான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் வீழ்ச்சியடைந்து செல்லும் போது அது தொடர்பில் பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் அவசியமாகவுள்ளது.

தற்போது இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது அரசியல்மயப்படுத்தி செய்வது தொடர்பாக விமர்சனங்கள் உள்ளன. இதனால் அரசியல் இன்றி அதனை முன்னெடுக்க வேண்டும்.

தகவல் சேகரிக்கும் போது பொய்யான தகவல்களை வழங்குவதால்தான் இதனை முறையாக முன்னெடுக்க முடியாதுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. இதில் அரசியல்வாதிகள் தொடர்படுவதால் நலன்புரி அரசியலாகுகிறது.  இதனால் அரசியல்வாதிகளை இதில் தொடர்புபடுவதை தடுக்க எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு மீண்டும் கிராமங்களுக்கு செல்வதற்கான பாதையாக சமுர்த்தி போன்ற நலன்புரி வேலைத்திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேககங்கள் நிலவுகின்றன. தற்போது வறுமை நிலைமை அதிகரித்துள்ளது. இவ்வாறானவர்களின் எண்ணிக்கையை விடவும் குறைந்தளவானவர்களுக்கே இந்த உதவிகள் கிடைக்கவுள்ளன.

நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் இரண்டு இலட்சம் பேரின் தகவல்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வறுமையானவர்களுக்கும் தமது தனிப்பட்ட தகவல்களை மறைக்கும் உரிமை உள்ளது. அவர்களிடம் இவ்வாறு தகவல்களை சேகரிக்கும் போது அதனை பாதுகாத்து எவ்வாறு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் ஆராய வேண்டும் என்றார்.