சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நீக்குவதுடன் அவருக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருமாறு ‘சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள்’ அமைப்பு சட்டமா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் என்ற சர்வதேச அமைப்பு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்துக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.
சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பெருமளவான முஸ்லிம்களுக்கு அவசியமான சட்ட உதவியை வழங்கியிருக்கின்றார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்றவிசாரணைப்பிரிவினரால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அவ்வேளையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ கூறப்படவில்லை. இருப்பினும் உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவரது தடுப்புக்காவல் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனையடுத்து பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்கப்பட்டு, 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னமும் நீக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இற்றைவரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையிலான எந்தவொரு ஆதாரமும் வாதிகள் தரப்பினால் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது. அவருக்கு எதிரான அடுத்த வழக்கு விசாரணை 12 ஆம் திகதி (நேற்று) நடைபெறும் நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தரணி என்ற ரீதியில் அவரது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டவையா என்ற கரிசனையைத் தோற்றுவித்துள்ளன.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்ட முதலாவது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆவார். பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதாக இலங்கை அரசாங்கம் பலமுறை உத்தரவாதமளித்திருக்கின்ற போதிலும், தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது.
இந்நிலையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நீக்குவதுடன் அவருக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று இலங்கையிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் தமது தொழிலை எவ்வித அச்சமுமின்றி முன்னெடுப்பதற்கான இடைவெளியை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.