எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு 30-ந் தேதி வரை நடைபெறவுள்ளது
தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகிறார்கள்.
சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் 209 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள்.புதுச்சேரியில் 48 தேர்வு மையங்களில், 301 பள்ளிகளைச் சார்ந்த 17,570 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 8,904 பேர் மற்றும் மாணவியர் 8,666 பேரும் ஆவர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் மொத்தம் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வினை சிறைவாசிகளில் ஆண்கள் 219 மற்றும் பெண்கள் 10 மொத்தம் 229 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, புழல் மற்றும் வேலூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6,19,721 ஆகும்.தேர்வில் டிஸ்லெக்சியா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர்-வாய்பேச இயலாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) மாணவர் 2,653 மற்றும் மாணவிகள் 1,537 என மொத்தம் 4,190 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள்-தேர்வர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து கொண்டுவரும் திட-திரவ நிலை உணவு வகைகளை பிறர் உதவியின்றியும் பிற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் உட்கொள்ளலாம் என நினைவூட்டப்பட்டுள்ளது.தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக் கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அக்குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அவரவர் எல்லைக் குட்பட்ட தேர்வு மையங்களைத் திடீரென பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாக கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறைச் சார்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 6,403 எண்ணிக்கையிலான பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்-இதர தகவல் தொடர்பு சாதனங் களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.