தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை: அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் பிரசாரம்

116 0

இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தும் வகையில் சர்வதேச பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.

குறத்த பிரசாரத்தை, இனப்படுகொலை தடுப்பு, வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஆகிய அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளன.

உலகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஒட்டாவா தமிழ்ச் சங்கம் என்பனவும் இந்த பிரசாரத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல அமைப்புகள் இந்த பிரசாரத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் 750க்கும் மேற்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய மனுவின் முதற்கட்ட நகல் பிரதமருக்கு அனுப்பப்பட்டு இந்த கையெழுத்து இயக்கம் தொடரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையத்தின் இயக்குநர் அம்பிகை கே செல்வகுமாரின் கூற்றுப்படி, ‘இந்த மனுவில் அதிக எண்ணிக்கையில் கையெழுத்திடுவது, இலங்கையில் அடுத்தடுத்து அரசாங்கங்கள் மேற்கொண்ட தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்க பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாமல், நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை அங்கீகரிப்பது சரியான திசையில் ஒரு முக்கியமான படியாகும்.

இந்த விடயத்தில் கனேடிய நாடாளுமன்றத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், கனடாவின் நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உதவுமாறு அனைத்து நாடுகளையும் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தைக் கேட்டுக்கொள்வதாகத் தமிழ் இனப்படுகொலை நினைவகம் கூறியுள்ளது.இந்தநிலையில் கையெழுத்துக்கான மனுவில் மேலும் பல தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன:-

இலங்கை அரசாங்கம் தனது படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் கட்டளையிடப்பட்ட கலப்பு நீதிமன்றத்தை (சர்வதேச நீதிமன்றம்) உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம், இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பயணத் தடை விதித்தது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு கனடா பயணத்தடை விதித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை ஒருமனதாக அங்கீகரித்தது.

இதனைத் தவிர , 1. 2013, மார்ச் 27 அன்று, இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றம், தமிழர்கள் மீதான ‘அடக்குமுறை’ நிறுத்தப்படும் வரை மற்றும் ‘இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு’ காரணமானவர்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

2. 2013, டிசம்பர் 10 அன்று, ஜேர்மனியின் ப்ரெமனில், இலங்கை மீதான மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வின்போது, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றத்தில் இலங்கை குற்றவாளி என்று பதினொரு நீதிபதிகள் குழு ஏகமானதாகத் தீர்ப்பளித்தது.3. 2015,பெப்ரவரி 10,அன்று, இலங்கையில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க ஐ.நா விசாரணை கோரிய தமிழ் இனப்படுகொலை தீர்மானத்தை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியது.

4. 2018, மே 7 அன்று, கனடாவின் ஒட்டாவாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியம் மற்றும் இனப்படுகொலை பற்றிய 2ஆவது சர்வதேச தமிழ் மாநாட்டில், 21 உலகத் தமிழ் அமைப்புகள் மற்றும் மாணவர் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றின. ‘இனப்படுகொலை குற்றச்சாட்டில் சுதந்திரமான சர்வதேச விசாரணை மட்டுமே ஏற்கப்படும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. 2021, மே 12, அன்று, ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார யோசனை 104 சட்டமாக்கப்பட்டது.

6. 2022,மே 18, அன்று, கனேடிய நாடாளுமன்றம் மே 18ஆம் திகதியைத் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை ஒருமனதாக நிறைவேற்றியது.7. 2022, நவம்பர் 9, அன்று, பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் முக்கிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.