AFP இன் இலங்கை புகைப்பட ஊடகவியலாளருக்கு சர்வதேச விருது

102 0

2023ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஊடகவியல் விருதினை AFP இன் இலங்கையின் கொழும்பு புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் வென்றுள்ளார்.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் வணிக ஊடகவியலுக்கான ரெனோல்ட்ஸ் மையம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட விருதுகளில் ‘புகைப்படத் தொடர்’ பிரிவில் கெளரவ விருதினை இஷார கொடிகார (வயது 41) வென்றுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுத்த அரசியல் எழுச்சிகளின்போது ஆற்றிய பணிகளுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

“கடந்த வருடம் கொழும்பில் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களின்போது நீங்கள் ஆற்றிய கடினமான மற்றும் சிறந்த பணிக்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்படுகிறது!” என AFPஇன் ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கான புகைப்பட பணிப்பாளர் மிலாடன் அன்டெனோவ் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

இஷார 2008ஆம் ஆண்டு AFP இல் இணைந்துகொண்டதோடு, அதன் கொழும்பு பணியகத்தில் கடமையாற்றி வருகிறார்.

மாலைத்தீவின் அரசியல் குழப்பநிலை, 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் களத்தில் நின்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

உடனடி செய்திப் பிரிவில் (Breaking News) AFPஇன் காபூல் பணியகம் முதலாவது பரிசினை வென்றது.

“மனித உரிமைகள் தொடர்பான ஒரு செய்தி நிகழ்வில், காலக்கெடு அழுத்தத்தின் கீழ் வேகம், துல்லியம் மற்றும் உயர்தரமான எழுத்தாக்கம்” என்ற அவர்களின் பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தற்போது 151 நாடுகளில் AFP தனது சந்தாதாரர்களுக்கு பரந்தளவிலான விடயப்பரப்புகளில் விரிவான செய்திகளை வழங்குகின்றது.

அத்தோடு, அரிதாக, ஏனைய ஊடகங்களால் எப்போதாவது பதிவுசெய்யப்படும் இடங்களில் இருந்து இது பெரும்பாலும் செய்திகளை வழங்குகிறது.

இவ்வாறு களத்தில் இருப்பதானது, AFP அதன் ஆதாரங்களை பல்வகைப்படுத்தவும் நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு செயற்படவும் வழிவகுக்கிறது. மனித ஆர்வக் கதைகளின் மீது அதிக கவனம் செலுத்துவதும், AFP ஊடகவியலின் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பம்சத்துக்கு காரணமாக அமைகிறது.

தனது எழுத்தாக்கத்துக்கும் புகைப்படத்துக்கும் ஏற்கனவே புகழ்பெற்ற AFPஇன் காணொளிகளும் தற்போது சர்வதேச தரம்  வாய்ந்தது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சந்தைப் பங்கில் அதன் நிலையான ஆதாயங்கள் மற்றும் அது பெற்றுக்கொள்ளும் பல விருதுகள் இதற்கு சான்றாகும்.

 

செய்தித் தொகுப்பின் முக்கிய அங்கமாக  காணப்படும் புகைப்படங்கள், தற்போது நிறுவனத்தின் வருவாயில் அரைவாசிப் பகுதியை ஈட்டிக்கொடுக்கின்றன.

அத்தோடு, மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றாக நேரடி காணொளி ஒளிபரப்புகள் (நாளொன்றுக்கு 40) காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.