அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் அரசியல் தலையீடின்றி, உண்மையில் வறுமையில் இருப்பவர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டு வழங்க வேண்டும்.
இனங்களுக்கு இடையிலான சமத்துவ கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைந்திருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் மொத்த சனத்தொகையில் 42 வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். இனங்களுக்கு இடையிலான சரியான சமத்துமான அரசியல் கொள்கையும், சரியான பொருளாதார கொள்கையும் இருந்திருந்தால் இலங்கையில் வறுமையை ஒழித்திருக்க முடியும்.
எனினும் நலன்புரி கொடுப்பனவுகளின் மூலம் வறுமையை ஒழிக்க முடியாது என்பதே என்னுடைய நிலைப்பாடாக உள்ளது.
நலன்புரி கொடுப்பனவுகளில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சினால் புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அது பரிசீலனையில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியலான மற்றும் பக்கச்சார்பான பரிசீலனை இன்றி வறுமையில் இருப்பவர்கள் யார் என்பதனை முறையாக ஆராய்ந்து இந்த கொடுப்பனவுகளை வழங்குவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
வயோதிபர்களுக்கான கொடுப்பனவுகள் தபால் நிலையங்கள் மற்றும் உப தபாலகங்களிலும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை சமூர்த்தி வங்கிகளில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளமை சிக்கலானது. சில இடங்களிலேயே சமுர்த்தி வங்கிகள் உள்ளன.
இதனால் அந்தப் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக பெருமளவு பணத்தை செலவிட்டு செல்ல வேண்டியுள்ளது. வயது முதிர்ச்சியால் அவர்களுக்கு தூர இடங்களுக்கு செல்வது சிக்கலானது.
இதனால் இந்த கொடுப்பனவை கிராம அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோருகின்றோம்.
அத்துடன் சில வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியின் கீழ் வடக்கு மாகாணத்தில் புதிய வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் விசேட தேவையுடையோருக்கான வைத்தியசாலை அமைக்கப்படுகின்றது.
அந்த வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், ஊழியர்களுக்கான நியமனங்கள் இல்லாமல் உள்ளது.
அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய வைத்தியசாலை அமைக்கப்பட்டும் அது மக்களுக்கு சேவையாற்ற முடியாத கட்டிடமாக இருக்கக்கூடாது. இதனால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.