வவுனியா இ.போ.ச சாரதிகள், நடத்துநர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு

88 0

லங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராகவும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று (12) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள் வழித்தட அனுமதிப் பத்திரமின்றி இ.போ.ச வவுனியா சாலை பேருந்து நேரசூசிக்கமைய, வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களை ஏற்றிச்செல்வது தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும், பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம் மாற்றுமாறு இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இ.போ.ச சாரதி மற்றும் நடத்துநர்கள் மீது தனியார் பேருந்தினர் தாக்குதல் மேற்கொள்ளப்படுவது தற்போது அதிகரித்துள்ளமை தொடர்பிலும் எவ்வித தீர்வும் இதுவரை கிடைக்காமல் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து விடுவித்து, இ.போ.ச. ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிற இவ்விரு கோரிக்கைகளையும் முன்வைத்து இ.போ.ச. வவுனியா சாலையினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், இ.போ.ச. வவுனியா சாலையின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள் போக்குவரத்துக்கு நடவடிக்கைகளுக்கு பேருந்தின்றி நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.

அத்தோடு, வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டிருந்தன.