கிளிநொச்சி மாவட்டத்தில் 1672 ஹெக்டேயர் நிலப்பரப்பு உவர் நிலங்களாக காணப்படுவதோடு, 643 ஹெக்டேயர் நிலப்பரப்பு எந்தவித பயிர்ச்செய்கையும் மேற்கொள்ள முடியாத நிலங்களாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அதிகளவான விவசாயக் காணிகள் உவர் நிலங்களாக மாற்றமடைந்துள்ளன.
குறிப்பாக, கரையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உவர் நீர் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளதோடு, கடல் நீர் உட்புகுவது போன்ற காரணங்களால் உவர் பரம்பல் அதிகரித்திருப்பதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது:
கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம், வன்னேரிக்குளம், பள்ளிக்குடா, பூநகரி, நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அதிகளவிலான நிலப்பரப்புகள் உவர் நிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இப்பிரதேசங்களில் சுமார் 1672 ஹெக்டேயர் நிலப்பரப்புகள் உவர்நில பிரதேசங்களாக உள்ளன.
அவற்றில் 1029 ஹெக்டேயர் நிலப்பரப்பு விவசாயிகளால் பயிர்ச்செய்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்நிலங்களில் குறைவான விளைச்சலை பெற முடிவதுடன், சில இடங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைகள் உவர் பாதிப்பு காரணமாக அழிவடைந்தும் வருகின்றன.
எஞ்சிய 643 ஹெக்டேயர் நிலப்பரப்புகளும் எந்தவித பயிர்ச்செய்கையினையும் மேற்கொள்ள முடியாத நிலங்களாக காணப்படுகின்றன.
இதன் காரணமாக இனிவரும் காலங்களில் மண்டைக்கல்லாறு மற்றும் ஏனைய கரையோர பகுதிகளில் உவர் நீர்த் தடுப்பணைகளை அமைப்பதன் மூலம் இவ்வாறான உவர் நிலங்களை பயிர்ச்செய்கை நிலங்களாக மாற்றியமைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.-