யூடியூப் சேனல் லிங்க்கை அனுப்பி லைக் போட சொல்லி கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடிக்கும்பல்

145 0

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. உங்கள் செல்போன் நம்பருக்கு குறிப்பிட்ட அளவுக்கு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது. அதனை பெறுவதற்கு நீங்கள் பாதி அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆசை காட்டுவார்கள்.

இதை நம்பி பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு மோசடிக்காரர்கள் கேட்கும் தொகையை கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இது போன்று குறிப்பிட்ட சில லிங்க்குகளை அனுப்பி அதனை கிளிக் செய்தால் உங்களுக்கு இத்தனை லட்சம் பணம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி மோசடி செய்வதும் மோசடியின் இன்னொரு வகை. அதே நேரத்தில் உங்களுக்கு சில லட்சங்கள் பரிசு கூப்பன் விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற வேண்டுமென்றால் ஆன்லைனில் நாங்கள் கூறும் லிங்க்கில் சென்று குறிப்பிட்ட பணத்தை கட்டுங்கள் என்று கூறுவார்கள். இதை நம்பி பணத்தை இழந்து பலரும் தவித்து வருகிறார்கள்.

இப்படி ஆன்லைன் மோசடிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் புதிது புதிதாக ஆன்லைன் மோசடிகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதன்படி சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் மோசடிக்கும்பல் ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறது. புதிய மோசடி கும்பல் இந்த முறை யூடியூப் சேனல் மூலமாக வலை விரித்து உள்ளது.

யூடியூப் சேனல் ஒன்றின் லிங்க்கை அனுப்பி இதனை நீங்கள் லைக் செய்தால் போதும். உங்களுக்கு முதலில் சிறிய தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டுவார்கள். பின்னர் தனியாக டெலிகிராம் குரூப் ஒன்றை தொடங்கி இருப்பதாக கூறி அதில் உங்களையும் டீம் லீடர் போல சேர்த்து வங்கி கணக்கு ஒன்றை தொடங்க சொல்லி அதில் சென்று நீங்கள் பணம் செலுத்தினால் அதில் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை காட்டுவார்கள்.

இதை நம்பி சென்னையை சேர்ந்த என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் லட்சம் முதல் கோடி வரை பணத்தை முதலீடு செய்து ஏமாந்து தவித்து வருகிறார்கள். இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர். புகார் கொடுக்காமல் பலர் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்க ணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் ரூ.30 லட்சம் பணத்தையும் , தொழில் அதிபர் ஒருவர் ரூ.1.2 கோடியையும் இழந்துள்ளனர். இதில் நீங்கள் தொடக்கத்தில் கட்டும் ஆயிரக்கணக்கான பணத்துக்கு கூடுதல் வட்டியை மோசடி ஆசாமிகள் வழங்கி விடுவார்கள்.

அந்த பணத்தை நீங்கள் எடுத்து பயன்படுத்தி இருப்பீர்கள். இதன் பின்னர் நீங்கள் முதலீடு செய்யும் லட்சங்களையும் கோடிகளையும் மட்டுமே மோசடி பேர் வழிகள் தடுத்து நிறுத்தி சுருட்டி விடுகிறார்கள். இதனால் கடன் வாங்கி பணம் கட்டிய பலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது தேவையில்லாமல் ஆன்லைனில் சாட்டிங் செய்வதை தவிர்த்தலே போதும். இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்ப முடியும் என்று எச்சரித்து உள்ளனர்.