சட்டமா அதிபர் திணைக்களம் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது

91 0

சட்டமா அதிபர் திணைக்களம் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. ஆகவே சட்டமாதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை மக்கள் கேள்வி கேட்க முடியும்.எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழு நாடும் என்றாவது எதிர்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மனித செயற்பாடுகளினால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு மனித குலத்துக்கே பிரதிபலனாக அமையும் என்பதை எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து நிச்சயம் என்றோ ஒருநாள் உறுதிப்படுத்தும்.இந்த கப்பல் விபத்தினால்   கடல் வளங்கள் பாதிக்கப்பட்டன,  ,கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழந்தன. இதனை பணத்தால் ஒருபோதும் மதிப்பிட முடியாது.

இந்த கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்ய கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் விசேட குழுவை நியமித்தது. இந்த குழுவின் அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்பட்ட அழிவை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டு நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பலால் கடல்  வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் கப்பலை வெளியேற்ற  வேண்டாம் என சட்டமாதிபர் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் கப்பலை வெளியேற்ற ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக  வெளிவிவகாரத்துறை அமைச்சின் அப்போதைய செயலாளர் ஜயநாத் கொலம்பகே கடற்படை தளபதிக்கு அறிவித்துள்ளார். கப்பலை வெளியேற்ற வேண்டாம் என ஜனாதிபதி,சட்டமாதிபர் குறிப்பிட்டுள்ள நிலையில்

கப்பலை வெளியேற்றுமாறு ஜயநாத்  கொலம்பகே எவ்வாறு குறிப்பிட முடியும்.ஆகவே இவ்விடயம்  தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக் கொள்ள இலங்கையில் வழக்கு தாக்கல் செய்வது பொறுத்தமானதாக அமையும் என சட்ட நிபுணர்கள் மற்றும், கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின்  ஆலோசனைக்கு அமையவே சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக  அரசாங்கம் குறிப்பிடுகிறது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது பொறுப்பாக்கி அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது. நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் சட்டமா அதிபர் திணைக்களம் இயங்குகிறது. ஆகவே சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை நாட்டு மக்கள் கேள்வி கேட்க முடியும் என்றார்.