சுனாமி, யுத்தம், கொவிட் பெருந்தொற்கு ஆகியவற்றின் ஊடாக ஏற்பட்ட அழிவுகளிலும் நிதி மோசடி செய்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள். எங்கோ சென்ற கப்பலை நாட்டு அழைத்து, அழித்து கடலில் மூழ்கடித்து விட்டு தற்போது நட்டஈடு பெற்றுக்கொள்வதை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.
ஊழல் மோசடிகள் கடல்வாழ் உயிரினங்களையும் விட்டு வைக்கவில்லை. நாட்டு மக்கள் இவர்களின் செயற்பாட்டை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.நட்டஈட்டிலும் ஒரு தரப்பினர் கொள்ளையடிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து சம்பவம் உலக வரலாற்றில் மிகவும் பாரதூரமான சமுத்திர இரசாயன பேரழிவாக சர்வதேச மட்டத்திலான துறைசார் நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.இந்த அழிவில் இருந்து நாடு என்ற ரீதியில் எப்போது விடுபடுவோம் என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலைமை அத்துடன் நிற்காது தொடர்வதை போன்றே உள்ளது. எங்கோ சென்ற கப்பலை நாட்டுக்கு அழைத்து ,கடலில் மூழ்கடித்து விட்டு இப்போது பேரழிவின் பின்னர் நஷ்டஈடு பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் போட்டிப்போட்டுக் கொண்டு கருத்துக்களை குறிப்பிடுகிறது.
இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தின் போது பேரழிவு ஏற்பட்டது. இறுதியாக அதனூடாக ஊழல் மோசடிகள் நடந்தன.அதேபோன்று யுத்தத்திலும் பேரழிவுகள் இடம்பெற்றது. அதிலும் ஆயுதம் மற்றும் மிக் விமான கொள்வனவு மோசடி என்பன நடந்தது.
அத்துடன் கொரோனா பாதிப்பின் போது மருந்து கொள்வனவு உள்ளிட்ட விடயங்களில் மோசடிகள் நடந்தன. அதேபோன்று பொருளாதார நெருக்கடியின் போது நிலக்கரி மற்றும் எரிபொருள் மோசடிகள் தொடர்பில் கதைக்கப்படுகின்றன. மருந்து கொள்வனவில் நடந்த மோசடியால் நுவரெலியாவில் பலர் கண் பார்வை பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளன.
இவ்வாறாக பேரழிவுகளில் ஊழல் மோசடிகளே நடக்கின்றன. அந்த வகையிலேயே இந்த கப்பல் விடயத்திலும் நடக்கின்றது. இந்த கப்பல் விவகாரத்திலும் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஏதேவொன்று நடந்துள்ளது என்பதே தெளிவாகின்றது.அந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இந்த சபையில் இருக்கலாம். இங்கு உரையாற்றுபவர்கள் ஏதும் நடக்கவில்லை என்பதனை கூறவில்லை.
பேரழிவுகளை தமது சொத்துக்களை பெருக்கிக்கொள்ளும் தந்திரங்களாக பயன்படுத்தும் செயற்பாடுகளே நடக்கின்றன. கப்பல் தீபற்றிய சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
அந்தக் கப்பல் எப்படி எமது கடற்பரப்புக்குள் நுழைந்தது? அந்தக் கப்பல் விபத்துக்கு உள்ளான பின்னர் பாதிப்பு தொடர்பில் ஆராய சென்றவர்களுக்கு கப்பலுக்குள் நுழைய விடாது தடுத்தது ஏன்? நஷ்ட ஈடு தொடர்பான விடயத்தில் கப்பலில் இருந்த பொருட்களால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? இது தொடர்பான முழு நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட குழப்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன என்றார்.