அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் நீதிமன்ற உத்தரவை மீறியதன் மூலம் நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மீறியுள்ளது என எதிர்க்கட்யின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் பணம் கொடுக்க மறுத்ததாலே தேர்தலை நடத்த முடியாமல் போனது. அதனாலே தேரதலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அரச ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிரதமர் தற்போது அதனை மறந்துவிட்டு அரச ஊழியர்கள் தொடர்பில் மிகவும் கவலைப்பட்டு பேசுகிறார். அரசாங்கத்தின் நடவடிக்கையாலே அரச ஊழியர்கள் பாதிக்கப்பட்டதை பிரதமர் நினைவில் கொள்ளவேண்டும்.
மேலும் நீதிமன்றம் தொடர்பில் பிரதமர் சபையில் பெருமையுடன் பேசினார். ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசாங்கம் பணம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டது.
பாகிஸ்தானில் எமது நாட்டைப்போல் பொருளாதார பிரச்சினை இருக்கும் போது, அந்த அரசாங்கம் தேர்தலை பிற்போட நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்துமாறு உத்திரவிட்டது. இலகையில் இடம்பெற்றதைப்போலவே அதிகாரி நீதிமன்றத்துக்கு வந்து, தேர்தலை நடத்த பணம் இல்லை என வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், தேர்தலை நடத்த பணம் வழங்காவிட்டால் சிறைக்கு செல்ல தயாராகுமாறு தெரிவித்தது. அவ்வாறே பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனால் அரசாங்கமே சட்டவிராேதமான முறையில் தேர்தலை பிற்போட்டது. நீதிமன்ற உத்தரவை மீறியது, நீதிபதிகளை பாராளுமன்றத்துக்கு அழைத்து சிறப்புரிமை குழுவுக்கு முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தது. சர்வதேச நாணய நிதியம் எமக்கு உதவியது, சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதாக தெரிவித்த வாக்குறுதியின் அடிப்படையிலாகும்.
ஆனால் அரசாங்கம் நாணய நிதியத்தின் முதல்கட்ட பணம் கிடைத்ததுடன் தேர்தலை ஒத்திவைத்து, சட்டத்தின் மாண்பை இல்லாமலாக்கியது. அதன் பிரகாரம் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்றார்.