கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் ‘தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக’ பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்கான்பரோ ரூச் பார்க் தொகுதி உறுப்பினர் விஜய் தணிகாசலம் இதுபற்றி மேலும் கூறியதாவது:
21 ஆம் நூற்றாண்டின் மிகமோசமான இனப்படுகொலையிலிருந்து மீண்ட இளைஞன் என்ற ரீதியில், கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்திலும் உலகளாவிய ரீதியிலும் மேமாதம் 12 – 18 ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் நினைவூட்டுகின்றேன்.
என்னால் கடந்த 2019 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 104 ஆம் இலக்கச்சட்டமானது தமிழினப்படுகொலை தொடர்பில் அறிவூட்டுவதன் அவசியத்தை ஏற்றுக்கொள்கின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினப்படுகொலை உச்சகட்டத்தை அடைந்தது.
துரதிஷ்டவசமாக இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்கள் திட்டமிட்ட இன அழிப்புக்கு முகங்கொடுத்துவருவதுடன், அது தற்போதும் இடம்பெற்றுவருகின்றது. இலங்கையில் பதிவாகிவரும் அண்மையகாலச் சம்பவங்கள் தமிழ்மக்களின் வழிபாட்டுத்தலங்கள் அரசாங்கத்தினால் இலக்குவைக்கப்படுவதைப் புலப்படுத்துவதுடன் இது தமிழ்மக்களுக்கு எதிரான ‘கலாசார இன அழிப்பு’ ஆகும்.
அதேவேளை ஒன்ராரியோவில் வாழும் தமிழ்மக்கள் பல தலைமுறைகளாக இடம்பெற்ற இனவழிப்பினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதன் வடுக்களின் தாக்கத்தைத் தற்போதும் எதிர்கொண்டுவருகின்றனர்.
எனவே தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்தை முக்கியமாகக் கருதுவது முன்னெப்போதையும்விட இப்போது அவசியமானதாக மாறியுள்ளது. எனவே தமிழினப்படுகொலை குறித்து அறிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, நாமனைவரும் இணைந்து இத்தகைய இனப்படுகொலை மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தமுடியும் என்று குறிப்பிட்டார்.