ரயில்வேயில் 3 ஆயிரம் பேர் புதிதாக இணைப்பு : எந்த உண்மையும் இல்லை

96 0

ரயில்வே திணைக்களத்துக்கு 3,000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

பல்வகை செயலணிக்கு அரசாங்கத்தினால்  இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த 3,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காகவே ரயில்வே திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அகற்றப்படுவதாக தெரிவித்து  எதிர்க்கட்சி  உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் சுயாதீனமாக ஓய்வு பெற்றுச் செல்லும் வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க ரயில்வே திணைக்களத்திலும் சில ஊழியர்கள் சுயாதீனமாக ஓய்வு பெற்றுச்  சென்றிருக்கலாம்.

எந்த அழுத்தங்களும் இல்லாமல் சுயாதீனமாக ஓய்வு பெறுபவர்களுக்கு அத்தகைய தீர்மானத்தை எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் யாரையும் பலவந்தமாக சேவையில் இருந்து நீக்கவில்லை. அவ்வாறு விருப்பமான 600 பேர்  சுயாதீனமாக ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர்.

அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழேயே அந்த செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. அதனால் ரயில்வே திணைக்களத்துக்கு 3,000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

பல்வகை செயலணிக்கு அரசாங்கத்தினால்  இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த 3,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காகவே ரயில்வே திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.