அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட முன்னிலையாகுவது சந்தேகத்துக்குரியது

79 0

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த ஒட்டுமொத்த வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இனிவரும் காலங்களில் அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட முன்னிலையாகுவது சந்தேகத்துக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவிருந்த நிலையில் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதனால் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள்  தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்  அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை தெளிவற்றதாக காணப்படுகிறது.

வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள்  போட்டியிட உத்தேசித்துள்ள தேர்தல் தொகுதிக்கு அப்பாற்பட்ட தேர்தல் தொகுதியில் சேவையாற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொகுதிக்கு அப்பாற்பட்ட வகையில்  சேவையாற்ற குறிப்பிடப்பட்டுள்ளதால் அரச சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால்.

ஒரு துறையில் சேவையாற்றிய அரச சேவையாளர் அருகில் உள்ள தேர்தல் தொகுதியில் அந்த சேவையை தொடர வசதிகள் இல்லாத நிலையில் அவர் மாகாணம் விட்டு மாகாணம் சென்று சேவையாற்ற பணிக்கப்பட்டுள்ளார்.இதனால் அரச சேவையாள்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் இந்த பிரச்சினைகள் ஏதும் தோற்றம் பெற்றிருக்காது.80 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அரச சேவையாளர்கள் ஏனையோரை விட அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நெருக்கடிகளினால் இனிவரும் காலங்களில் அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட முன்னிலையாகுவது சந்தேகத்துக்குரியது என்றார்.