எல்பின் ஆற்றுநீர் இரசாயன கலவைக்கு உட்பட்டிருப்பதானது நுவரெலியா மாவட்டத்துக்கும் அங்குவாழ் மக்களுக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மிக விரைவாகவே இவ்விடயத்தில் தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நுவரெலியாமாவட்ட அரச அதிபரை வலியுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட அரச அதிபரிடம் எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் கடிதத்தின் பிரதிகளை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நுவரெலியா மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் எல்பின், மெராயா, லிந்துலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளில் அனேகமானோர் எல்பின் ஆற்றின் இருபக்கக் கரையோரங்களை அண்மித்தவாறே விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்பின் ஆற்று நீரையே தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திவரும் பிரதேச விவசாயிகள் துரதிஷ்டவசமாக மேற்படி ஆற்று நீரில் நச்சுத் தன்மையுடனான இரசாயன பதார்த்தம் கலந்திருப்பதன் காரணமாக விவசாயிகள் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
அத்துடன் தமது விவசாய நடவடிக்கை களை முன்னோக்கி நகர்த்தி செல்வதில் எதிர்கொள்ளப்படும் விளைவுகளை தவிர்த்து கொள்வதற்கு உரிய தலையீடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட விவசாயிகள் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதுடன் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
இவ்விவகாரத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்படி ஆற்றுநீர் அம்பேவெல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி நிலையமொன்றின் கழிவுகள் ஊடாகவே இரசாயன கலவைக்கு ஆட்படுவதாக தெரிய வருகிறது.
இந்நிலைமையானது விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை ஆற்றின் உயிரினங்களுக்கும் உயிராபத்தை ஏற்படுத்தி வருகிறது. இது எதிர்காலத்தில் பாரிய மனித முரண்பாடுகளுக்கு வழிவகுக்கலாம்.
அதுமாத்திரமல்லாது அப்பாவி மக்களை நோயாளிகளாக்கும் நிலைமைக்கும் கொண்டுசெல்லும் சாத்தியம் காணப்படுகிறது. மேலும் இது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகவும் அமைகிறது.
கடந்தகாலங்களில் எல்பின் ஆற்றில் பெருமளவு மீன்கள் இறந்தமை காரணமாக அந்த ஆற்று நீரின் மாதிரியானது இரசாயன பகுப்பாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு எல்பின் ஆற்றுநீர் இரசாயன கலவைக்கு உட்பட்டிருப்பதானது நுவரெலியா மாவட்டத்துக்கும் அங்குவாழ் மக்களுக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகவிரைவாகவே இவ்விடயத்தில் தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தும்படி தயவாக கேட்டுக்கொள்கிறேன்.