தலங்கம, கொஸ்வத்தையில் செவ்வாய்க்கிழமை (09) இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல மற்றும் கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டடுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொஸ்வத்தை, சமகி மாவத்தையில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடுவலை முன்னாள் பிரதி மேயர் ஒரு குழுவினருடன் இரண்டு வாகனங்களில் வந்து அவர் மீதும் அவரது வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தின் போது காயமடைந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாம் மோதலின் போது தாக்கப்பட்டதாக கடுவலை முன்னாள் பிரதி மேயரும் முறைப்பாடு செய்துள்ளார்.
இரு தரப்பினரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் மோதல் தொடர்பாக சமூக ஊடக செயற்பாட்டாளர் மற்றும் கடுவலை முன்னாள் பிரதி மேயர் ஆகிய இருவரையும் தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.