என்எல்சிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவை – மின்உற்பத்தி பாதிப்பதாக நிறுவன தலைவர் தகவல்

88 0

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தற்போது 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டு 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

என்எல்சி இந்தியா நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தி செய்வதில் பிரதான அங்கம் வகித்து வருகிறது. இந்நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த முயன்றது. இதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடலூர் சுற்றுலா மாளிகையில் என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் பிரசன்னகுமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தற்போது 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டு, 1,000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால் நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சார உற்பத்தியை சீராக செய்ய முடியும்.

என்எல்சியில் புதிதாக 1,800 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த வேலை முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும். 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணியில் தமிழர்களே அதிகம்: என்எல்சியில் ‘தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை’ என்பதில் உண்மை அல்ல. என்எல்சியில் 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களின் 95 சதவீதம் பேர் தமிழர்கள். நிரந்தர தொழிலாளர்களின் 83 சதவீதம் பேர் தமிழர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை இழப்பீடு வாங்காதவர்களுக்கு 3 மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இதுதான் காரணமே தவிர, ஒவ்வொரு பகுதிக்கும் இழப்பீட்டில் மாற்றம் என்பதில் உண்மை அல்ல.

கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றால் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் வாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்எல்சி நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கிறது. இந்த மின்சாரத்தை தமிழக அரசு வெளி சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு ரூ.10 அல்லது ரூ.12 கொடுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

தனியாரிடம் செல்லாது: நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான மக்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “மக்களை பலர் திசை திருப்புகிறார்கள். தவறான புரிதல் காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நிறுவனம் தனியாரிடம் செல்லவும் வாய்பில்லை” என்றும் என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்தார்.