தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையாக மாறி வருவதால், அதற்கான தயாரிப்புக் குழுவில் இருந்து விலகுவதாக அதன் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜவகர் நேசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணிகளில் குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை முடித்து செப்டம்பர் மாதத்துக்குள் வரைவு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகுவதாக அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவகர் நேசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட முறைகளையும், தரங்களையும் பின்பற்றாமல் தனித்துவமிக்க கல்விக் கொள்கையை உருவாக்க முடியாது. மேலும், ஒவ்வொரு கொள்கையையும் அமல்படுத்துவதில் உள்ள பொருளாதார, சமூக சிக்கல்களை ஆய்வு செய்து நமக்கானதை தேர்வு செய்ய வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கை வடிமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தோம். அதில் உலகளவில் 113 வல்லுநர்கள் கொண்ட 13 துணைக் குழுக்களுடன் அமைத்தது, 22 கல்வி நிறுவனங்களில் மாதிரி ஆய்வுகள் முடித்தது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் அடங்கும்.
இறுதியாக எனது ஆய்வுகள் மற்றும் 13 துணைக் குழுக்களின் பரிந்துரைகளை கொண்டு இடைக்கால அறிக்கையை தயாரித்து குழுவின் தலைமையிடம் சமர்ப்பித்தேன். இது நீண்டகாலம் வழிகாட்டக்கூடியது. எனினும், ஜனநாயகமற்ற முறையில் செயல்படும் தலைமை மற்றும் சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிகார தலையீடுகளாலும் இயங்க முடியாமல் குழு தடுமாறிவருகிறது.
அதன் விளைவாக தற்போது தேசியக் கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கும் பணியை குழு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்தக் குழு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்டு, தனியார் நிறுவனங்களின் நலன்களை விரும்பும் தேசிய கல்விக் கொள்கையின் மற்றொரு வடிவமாகவே இருக்கும்.
அதேபோல், மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் சில நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்க அழுத்தம் தந்தார். இதுகுறித்து குழுவின் தலைவரிடம் பலமுறை முறையிட்டும் அதை அவர் புறக்கணித்தார். இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடமும் கடிதம் சமர்ப்பித்தேன். எனது கடிதத்துக்கு எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
எனவே, இதற்கு மேலும் குழுவில் நீடிப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து நான் விலகுகிறேன். எனினும், சிறந்த மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான எனது போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.