சித்த மருத்துவத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல ஆயுஷ்அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை தாம்பரம் – சானடோரியத்தில் செயல்படும் தேசியசித்த மருத்துவ நிறுவனத்துக்கு (மருத்துவமனை), இந்தியாவிலேயே சிறந்த செயல்பாட்டுக்காக தொடர்ந்து இரண்டாவது முறையாக மருத்துவமனைகளுக்கான தேசிய தர அங்கீகாரம் கடந்த 4-ம் தேதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆய்வுகுழுமம் ஆகியவற்றின் பொதுக்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்தது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய. ராஜேஷ்கோடேசா தலைமையில் நடந்த கூட்டங்களில் ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலர் பிரமோத்குமார் பாடக், மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர், தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கட்டமைப்பு வசதிகள்: தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்தியசித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் இருக்கும் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி, இரண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், சாதனைகள், வளர்ச்சிகள் பற்றி விரிவாகவிளக்கினார்.பின்னர் இவ்விரு நிறுவனங்களுக்கும் தேவையான வசதிகளைஏற்படுத்திக் கொடுத்தல், வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள், சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்த விவாதங்கள், சித்த மருத்துவத்தை எல்லை தாண்டி பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வசிப்பவர்கள் பயன் பெறுவதற்கான பல திட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. சித்த மருத்துவ முறையை நாடெங்கிலும் முன்னெடுக்கத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படடது.