அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக விசேட பொதியை ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார் -பந்துல குணவர்தன

115 0
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான விசேட பொதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அமைச்சர்கள் குழுவிற்கு அறிவித்ததாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் அச்சமின்றி இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால்தான் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவார்கள் என தெரிவித்த அமைச்சர், கடந்த வருடம் இந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறை சர்வதேச ரீதியில் நாட்டிற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.
ஒரு நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு, அந்த நாட்டில் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி வாழவும், சட்டத்தின் ஆட்சி முறையாகச் செயற்படவும், முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு, அனுசரணை, நிதி நன்மைகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்க இயலாமையால் முதலீடுகள் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயங்களை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாட்டிற்கு விசேட பொதி ஒன்று விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.