பற்றியெரிந்த தாய் நிலம்! – இரா.செம்பியன்-

227 0

புன்னகைத்த உயிர்களும்
பூச்சொரிந்த மரங்களும்
புல்வளர்ந்த நிலங்களும்
வாழ்வுதரும் வளங்களும்
வற்றாத கொடைகளும்….
பற்றியெரிந்த நிலமாய்
பாழடைந்து கிடக்கிறது
முள்ளிவாய்க்காலெனும்
வரலாற்றுத் தாய்மடி…!

இரண்டாயிரத்தியொன்பது
இப்படித்தான் ஆனது…
செவ்வானம் சிவந்து
ஒளிபாய்ச்ச முன்னமே
சடசடத்து சல்லடை போட்டு
இரவு பகலின்றியே
நச்சு ஒளிகளை வீசியெறிந்து
முகம் சிதைந்து போனது
முத்தான எம் முல்லைமண்!

ஆர்த்தெழுந்த இனமன்று
அடங்காப்பற்று மண்ணிலே…
அழித்தொழிக்கப்பட்டு
ஆத்ம நலம் சிதைக்கப்பட்டது!
வெந்துயரில்த் தோய்ந்து
வேதனையால் உழன்று
மூத்த மொழியொன்று
வசந்தம் தொலைத்தது!

உலகத்தார் உதவி நிற்க
நாசக் கெடு வழிக்கு
பிக்குவும் பிரித்தோதி
ஊன்றுகோலாகையிலே….
திமிர்கொண்டு எழுந்த
கொலைவெறியன் சிங்களனை
புத்தனின் ஞானமும்
தடுக்கவில்லை…!

தரமென்று எதைப்பார்த்தான்…
தகுமென்று எதை நினைத்தான்…
வாழப் பிறந்த இளம்
குஞ்சுகளையும் கூடவே
நசுக்கி மகிழ்ந்து நிறைந்தான்!

வஞ்சக வலை விரிப்பையும்
வகையான துரோகங்களையும்
நெஞ்சுரத்தால்த் தாங்கி..
அறமொன்றால் எதிர் கொண்டு
நேரெதிர் நிமிர்ந்தெழுந்த
தமிழரெம் சேனையாய்
புலிகள் படை ….
வரும்பகையை முட்டியே
செங்களமாடியது!

பொற்காலப் பொழிவொன்றில்
தமிழரின் சொர்க்கமாய்
துலங்கிய வன்னிமண்
பொலிவிழந்து போய்
பார்க்கும் இடமெல்லாம்
படரும் குருதிப் பெருக்காய்
கறைபடிந்து போனது…!

பேரொலியோங்கிட
சங்கெடுத்து முழங்கிய
சரித்திர இனமொன்றை
சரித்தே விட்டோமென
சிரித்தே நின்றன
அறமற்ற கா(மு)மினிகள்!

நேற்ரெரிந்த எம் நிலம்
மீண்டெழ வேண்டும்!
அது நீடு வாழ வேண்டும்…
பார் போற்றும் எங்கள் மொழி
அரியணையில் அமர வேண்டும்..!
அசைந்தாடும் எங்கள்
கொடியின் அழகை
அகிலம் பார்க்க வேண்டும்!

அறம் வாழும் ஓர் தகமை
அது உலகிலே உண்டெனில்….
மனிதத்தை மனிதம்
மதிக்கின்ற நிலை
உலகிலே நிலைக்குமெனில்…
வலியுணரும் கருணை நிலையை
உயிர்ப்பித்த உலகமெனில்…
வலிதந்த உலகே உனக்கே
அதனைத் திருப்பித் தருகிறோம்….
நீதியொன்றைத் தரவேண்டுமென்ற
பெரு வலியை.

-இரா. செம்பியன்-