தெஹிவளை பகுதியில் குளிரூட்டி பழுது பார்க்கும் நிலையத்துக்குள் தாக்குதல் ; ஒருவர் பலி ; காயம் 14 பேர் கைது

137 0

கொழும்பு, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள  குளிரூட்டி பழுதுபார்க்கும் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக்கூறி  இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொலைச்செய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தெஹிவளை பகுதியில் உள்ள குளிரூட்டி பழுது பார்க்கும் நிலையமொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அவர்களை மடக்கி பிடித்து, தாக்கி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தெஹிவளை  பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் கல்கிசை, படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் காயமடைந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அவர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறி,  வேன் மற்றும் முச்சக்கர வண்டி என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் வீதியில் நடந்து சென்ற ஒருவரை கடைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கருதி குளிரூட்டி திருத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் அவரைத் தாக்கியதுடன்  அதன்பிறகு அவருடன் வந்த மற்றைய  நபரை தொலைபேசி மூலம்  அழைக்கச் செய்து அவர் வந்ததும் அவரையும் தாக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் சந்தேக நபர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறி காயமடைந்த அவர்களை  தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதே நேரத்தில் அவர்கள் தாக்கப்பட்ட இடத்தை   கழுவி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்களும் கிண்ணியா, நிலாவெளி, அவிசாவளை, களுத்துறை, பண்டாரகம, காலி, பேருவளை, கந்தளாய், ஹட்டன் மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்  மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் கைது செய்யப்பட்ட குழுவினர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.