“போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை”

466 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவின் பிரதமரது வாசல்த்தலம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் 26/02/2017 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து நடைபெறுவது யாவரும் அறிந்ததே.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரன் அவர்களும் அவருடன் இனைந்து செயற்பாட்டாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்

கடுமையான குளிர், கொட்டும் மழை, அதிவேகமான காற்றுக்கு மத்தியில் வெட்டவெளியில் தாயகமக்களின் விடிவுக்காக இவர்கள் இப்போராட்டத்தை தொடர்ந்தனர். உடல் உபாதை மற்றும் காலநிலை ஒவ்வாமை காரணமாக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களது வேண்டுதலுக்கமைவாக உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்ட போதும் இராசலிங்கம் திருக்குமரன் அவர்கள் உண்ணாவிரதத்தை தனி ஒருவராக பத்தாவது நாளான இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளார்.

எனினும் அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டும் அவர் தொடர்ந்தும் எமது தாயகத்திற்காக களமாடவேண்டிய தேவை உள்ளமையினாலும் பத்தாவது நாளான இன்று மாலையுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தவிர்த்து போராட்ட வடிவத்தை மாற்றி தொடர்ந்து எழுச்சிப் போராட்டமாக தொடர்வதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் எதிர்வரும் 23/03/2017 வரை பிரித்தானியப் பிரதமரின் இல்லம் முன்பாக எழுச்சி போராட்டங்களாகவும் ஆர்ப்பாட்டங்களாகவும் வெவ்வேறு விதமாக ஒவ்வொரு நாளும் போராட்டம் முன்னெடுக்கப்படும். இப்போராட்டங்களிலும் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு எமது நிலைப்பாட்டை பிரித்தானியாவிற்கும் ஐநாவிற்கும் உலகிற்கும் ஓங்கி ஒலிக்குமாறு செயற்பாட்டாளர்களையும் பொதுமக்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது.

“போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை”

காலத்தின் தேவை கருதி அனைவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானியா
TGTE UK