புத்தளத்திலிருந்து கொழும்பு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம்

89 0

பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து நள்ளிரவு முதல் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

 

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக புத்தளத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும்  ரயில் சேவைகளும் கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு செல்லுமு் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் புத்தளத்திலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிச் செல்லும் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டிருந்ததாகவும் பின்னர் காலை 9.55 மணியளவில் முன்னெடுக்கப்படும் புத்தளம் கொழும்பு கோட்டை ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததாகவும் கொழும்புலிருந்து பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்களை ஏற்றி வருகைத் தரும் ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிலையில் பயணச்சீட்டு வழங்கும் கருமபீடம் மூடப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தமையினால் புத்தளம் புகையிரத நிலையம் வெறிச்சோடிய நிலையில் காணக்கூடியதாக இருந்தது.