டெங்கு நோயாளர் 50 சதவீத நோயாளர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் !

83 0

நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாண்டிலேயே மே மாதத்துக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது மிக மோசமான நிலைவரமாகும் என்று கொழும்பு மாவட்ட அதிபர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையில் டெங்கு நோய்ப் பரவலில் 50.8 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் டெங்கு நோய் அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களில் கம்பஹா முதலிடத்திலும் , கொழும்பு அடுத்தாகவும் காணப்படுகிறது.

இவ்வாண்டில் மாத்திரம் இதுவரையில் 6678 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு, கொத்தொட்டுவ, பிலியந்தல, கடுவலை மற்றும் மஹரகம உள்ளிட்ட சுகாதார மருத்துவ பிரிவுகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாண்டிலேயே மே மாதமளவில் இவ்வாறு அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கிராம மட்டத்திலான டெங்கு ஒழிப்பு குழுக்களை மேலும் பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்களின் அடிப்படையில் பாடசாலைகள் , அரச நிறுவனங்கள் மற்றும் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடங்கள் உள்ளிட்டவற்றிலேயே அதிகளவான டெங்கு நுளம்புகள் உருவாகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.

எனவே இவற்றில் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்கு ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும்.

உரிய நடவடிக்கைகள் முன்னரே எடுக்கப்படாவிட்டால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து , வைத்தியசாலை கட்டமைப்பிலும் நெருக்கடி நிலைமை ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது சூழலை தூய்மையின்றி வைத்திருப்போருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.