இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும், அத்துடன் அது தொடர்பான பிரச்சினைகளை வடக்கு எம்.பிக்கள் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின் போது விரிவாக கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து சென்றவர்கள் இரு பிரிவினராக உள்ளனர் புனர்வாழ்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவல்களின்படி தமிழ்நாட்டில் 106 அகதி முகாம்கள் செயற்பட்டு வருகின்றன. அங்கு 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 435 பேர் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக படகுகள் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள அகதிகள் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
2012 ஏப்ரல் வரை விமானம் மூலம் சென்றவர்கள் அகதி முகாம்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் அங்கு சென்றவர்கள் அகதி முகாம்களில் பதிவு செய்யப்படவில்லை.
அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 34 ஆயிரம் பேர் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
படகுகள் மற்றும் விமானங்கள் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள இலங்கை தமிழர்களில் ஒரு பிரிவினர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றார்கள்.
அந்த வகையில் அகதி முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தமாக 92,435 பேர் வசிக்கின்றனர். அவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் இலங்கைக்கு தாம் திரும்புவதற்கு விரும்பினால் அவர்கள் அந்த முகாம் பொறுப்பாளரிடம் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் நாடு திரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம். அவர்களுக்கு எத்தகைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமோ அதனை அரசாங்க மேற்கொள்ளும். எமது உதவி உயர் ஸ்தானிகர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்.
அதேபோன்று இதுவரை நாடு திரும்பியுள்ளவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக நாம் நடமாடும் சேவையொன்றை அண்மையில் நடத்தியுள்ளோம்.
அவர்களின் தேவை தொடர்பில் நேரடியாகவே அம்மக்களுடன் கலந்துரையாடியுள்ளோம். பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் போது இந்த விவகாரம் தொடர்பில் அங்கு கலந்துரையாடினால் அது தொடர்பான நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ முடியாது. அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி, இங்கு இயல்பு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம்.
அதேபோன்று நாம் இந்திய தூதுவருடனும் வெளிவிவகாரத்துறை அமைச்சுடனும் கலந்துரையாடி குறித்த விசாவுக்கான கட்டணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்போம்.
அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாம் வெளிப்படையாக செயல்படுகின்றோம். அதற்காக எம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம் என்றார்.