சட்டமா அதிபரின் உத்தரவையும் மீறி அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு புறம்பாக வேறு நிறுவனத்தின் ஊடாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிராேதமான முறையில் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கிறது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
2022 டிசம்பர் 19 ஆம் திகதி அமைச்சரவையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரல் எனர்ஜி நிறுவனத்தின் சைபிரியன் லைட் ஊடாக 4 மாத காலங்களுக்காக மசகு எண்ணெய் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலாவது கப்பல் மார்ச் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்தது. 26 ஆம் திகதியளவில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குகிறது.
ஆனால் கொரல் எனர்ஜி நிறுவனத்துடனேயே பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. அந்த நிறுவனமே டென்டர் கோரிக்கையில் தகுதி பெற்றிருந்தது.
இந்நிலையில் மார்ச் 25 ஆம் திகதி ஜுவலரி விலாசத்தில் உள்ள நிறுவனமொன்றின் ஊடாகவே எரிபொருள் வருகின்றது. வேறு நிறுவனத்தின் ஊடாக எப்படி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இதில் பாரிய மோசடி நடந்துள்ளது. இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நகையகத்தின் பெயரில் கடந்த நவம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடமிருந்து எவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இது முழுமையாக சட்டவிரோத கொடுக்கல் வாங்கலாகும் என்றார்.
இதன்போது எழுந்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறுகையில், அவ்வாறு நாங்கள் டென்டருக்கு அப்பால் எந்த நிறுவனத்துடனும் கொடுக்கல் வாங்கலை செய்ததில்லை. இப்போதும் கொரல் எனர்ஜி நிறுவனத்தின் ஊடாகவே அதனை பெறுகின்றோம். அவர்களுக்கு தடைகள் வரும் போது வேறு நிறுவனத்திற்கு பணம் அனுப்ப கோரலாம். ஆனால் அதனை எம்மால் செய்ய முடியாது என்று கூறியுள்ளோம்.
அவ்வாறு இருந்தால் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு இங்கு தெரிவிக்காமல் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாட்டை செய்யலாம். வேறு கணக்குடன் கொடுக்கல் வாங்கல் செய்திருந்தால் அதனை ஆதாரங்களுடன் காட்டுங்கள் என்றார்.
இதனை தொடர்ந்து மீண்டும் எழுந்த விஜித ஹேரத், நாங்கள் சவால்களை ஏற்றுக்கொண்டே இதனை கூறுகின்றோம். மக்களின் நிதி தொடர்பில் பாெறுப்புக்கூறவேண்டிய பாராளுமன்றத்திலேயே இதனை கூறுகின்றோம். கொரல் எனர்ஜி நிறுவனத்திற்கு அல்லாது வேறு நிறுவனத்திற்கு பணத்தை வழங்க முடியாது. அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால் அதற்கான அனுமதியை கேட்டு அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்திருக்கிறார். இது மக்களின் பணம். அதனால் மக்கள் பணத்தில் விளையாட அனுமதிக்க முடியாது என்றார்.