மே 09 சம்பவத்தை அரசாங்கம் குறிப்பாக பொதுஜன பெரமுன கேட்டு வாங்கிக் கொண்டது. ஆகவே நாட்டு மக்களை விமர்சிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் மே 09 சம்பவத்தை தோற்றுவிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதால் நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு (அரகலய) போதைப்பொருள் பாவனையாளர்கள் தலைமை தாங்கினார்கள்.
முடிந்தால் என் வீட்டின் மீது தற்போது கை வைத்து பாருங்கள் என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க சபையில் சவால் விடுத்தார்.
சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது மே 09 தின சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல விடயங்களை சுட்டிக்காட்டினார்கள்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார கந்தானை ஆடைத்தொழிற்சாலையின் முதலீட்டாளர் தாக்குதல் விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டித்தனமாக செயற்பட்டால் நாட்டுக்கு எவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவார்கள். இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கி முறையான விசாரணைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.
மே 09 தினத்தன்று இவர்கள் இவ்வாறு சண்டித்தனமாக செயற்பட்டார்கள்.மே 09 தினத்தன்று அரசாங்கம் குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கேட்டு வாங்கிக் கொண்டது.
இவ்விடயத்தில் நாட்டு மக்களை விமர்சிக்க வேண்டாம்.அதிகாரத்தில் இருந்துக் கொண்டு மீண்டும் மே 09 சம்பவத்தை தோற்றுவிக்க வேண்டாம் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கோலாசான்,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மே 09 ஆம் திகதி அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி 12 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கத்தின் குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள்,சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் இவ்வாறான தன்மையே நாட்டில் காணப்பட்டது.
போராட்டத்துக்கு (அரகலய) போதைப்பொருள் பாவனையாளர்கள்,சமூக விரோத செயற்பாட்டாளர்கள் தலைமை தாங்கினார்கள். அவர்கள் ஜனாதிபதி மாளிகை,ஜனாதிபதி செயலகம் உட்பட அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து நாட்டின் சட்டம்,ஒழுங்கை முழுமையாக சீர்குலைத்தார்கள்.பாராளுமன்றத்தை ஆக்கிரமிக்க வருகை தந்தார்கள். பாராளுமன்றம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால் நாட்டில் தற்போது ஜனநாயகம் மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது.போராட்டகாரர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எதிரணி பக்கம் உள்ளார்கள்.முடிந்தால் தற்போது என் வீட்டின் மீது கை வைத்து பாருங்கள் என சவால் விடுத்தார்.