தற்போது அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண காவற்துறையின் புதிய தலைமைச் செயலகமானது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. சிறிலங்கா காவற்துறையில் 100,000 வரையான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். யாழ்ப்பாணமானது தமிழர் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசமாகும்.
இங்கு சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த 50 இற்கும் குறைவான மக்களே வாழ்கின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்த 532 காவற்துறை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். காவற்துறை உறுப்பினர்களில் 43 பேர் மட்டுமே தமிழர்களாவர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் காவற்துறையினரில் மிகச் சிலரே தமிழ் மொழியைப் பேசக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளனர்.
சிறிலங்கா காவற்துறையினரிடம் சென்று தமது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். கடந்த 2009ல் முடிவுற்ற 26 ஆண்டுகால யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்களில் இதுவும் அடங்குவதுடன் இது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் நடைமுறைப் பிரச்சினையாகவும் காணப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதத்தின் ஒரு நாள் சிறீபத்மானந்தா பிரமேந்திரா தனது வாகனத்திற்கான எண்தகட்டை மீளவும் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா காவற்துறையின் தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருந்தார். இவர் தனது முறைப்பாட்டைக் கூறுவதற்காக பல மணித்தியாலங்கள் வரை தமிழ் பேசும் காவற்துறை உறுப்பினர் ஒருவருக்காகக் காத்திருந்தார். ஆனால் அத்தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஒரேயொரு தமிழ் பேசும் காவற்துறை உறுப்பினர் தனது மேலதிகாரிக்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் மொழிபெயர்ப்புச் செய்வதற்காக அவர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றிருந்தார். இதனால் தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த அனைவரிடமும் மறுநாள் வருமாறு பணிக்கப்பட்டது.
சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் முக்கால்வாசி மக்கள் சிங்களவர்களாவர். எஞ்சிய கால்வாசி மக்கள் தொகையில் தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களும் அடங்குகின்றனர். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாவர். ஆகவே இந்த மாகாணங்களில் பணியாற்றுவதற்கான காவற்துறை உறுப்பினர்களும் தேசிய மட்டங்களிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.
இவர்கள் அந்தந்த பிரதேசத்தில் பணியாற்றும் வகையில் தெரிவு செய்யப்படுவதில்லை. இதனால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள காவற்துறை நிலையங்களில் சிங்கள இனத்தைச் சேர்ந்த காவற்துறை அதிகாரிகளே பணியாற்றும் நிலை காணப்படுகிறது. நாட்டில் யுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சிறிலங்கா காவற்துறையில் தமிழ் மக்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
1948ல் பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரும் கூட, நிர்வாக மொழியாக ஆங்கிலம் காணப்பட்டது. ஆனால் 1956ல், சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் மட்டும் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் அரச சேவைகளில் பணியாற்றிய தமிழ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சிங்கள மொழியைக் கற்காவிட்டால், இவர்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது.
இதனால் உயர் அரச பதவிகளை வகித்த தமிழ் அதிகாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. 1956ல் 30 சதவீதமாகக் காணப்பட்ட தமிழ் அரச உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையானது 1970ல் ஐந்து சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று சிறிலங்கா இராணுவத்தில் 1956ல் 40 சதவீத தமிழர்கள் பணியாற்றிய போதிலும் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த வீதமானது ஒரு வீதமாகக் குறைவடைந்தது.
தமிழ் மக்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான சில மாற்றங்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட போதிலும் இன்னமும் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. தமிழ் மொழியானது அரச கரும மொழியாகப் பயன்படுத்தப்பட முடியும் என்பதற்கான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
2007 தொடக்கம் அரசாங்க சேவையில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் ஐந்து ஆண்டுகளுக்குள் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்கின்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செயற்பாடும் மந்தமாகவே காணப்படுகிறது. 2015-16 வரையான காலப்பகுதியில், மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் 60 சதவீதமானோர் சித்தியடைவதற்குத் தேவையான ஆகக்குறைந்த புள்ளிகளையே பெற்றிருந்தனர். ஆகவே இவர்கள் மொழித் திறனை சரளமாகப் பெற்றிருக்கவில்லை என இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
அத்துடன் அரச அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவுறுத்தல்களிலும் மொழி ரீதியான வழுக்கள் காணப்படுகின்றன. அரச அலுவலகம் ஒன்றில் சிங்களத்தில் எழுதப்பட்ட அறிவுறுத்தல் பலகையில் ‘இது கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது’ என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதே அலுவலகத்தில் இந்த அறிவுறுத்தலானது ‘இது கர்ப்பிணி நாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது’ என தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
அரச சார்பற்ற நிறுவனமான ‘ மாற்றுக் கொள்கைகளுக்கான மையமானது’ உத்தியோகபூர்வு மொழிக் கோட்பாட்டு மீறல்கள் தொடர்பாக பதிவு செய்து வருவதுடன் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது. வங்கிப் புத்தகங்களில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வார்த்தைகள் அச்சிடப்பட வேண்டும் என 2014ல் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தால் மத்திய வங்கியிடம் வலியுறுத்தியது.
அதேபோன்று தற்போது மருத்துவப் பொருட்கள் மீதும் இரண்டு மொழிகளில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என இந்த மையத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது. 100 இற்கும் மேற்பட்ட சட்டங்கள் தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழியில் உத்தியோகபூர்வமாக மொழிபெயர்க்கப்படவில்லை. இவற்றுள் பெரும்பாலான சட்டங்கள் கொலனித்துவ ஆட்சியின் போது வரையப்பட்டன.
2014 வரை தேசிய அடையாள அட்டையில் கூட இரு மொழிகளும் பயன்படுத்தப்படவில்லை. 2014ன் பின்னர் சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டதன் பின்னரே தற்போது இரு மொழிகளிலும் தேசிய அட்டை அச்சிடப்படுகிறது.
வடக்கில் உள்ள அரச அலுவலகங்களில் வழங்கப்படும் பெரும்பாலான படிவங்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் சிங்கள மொழியில் மட்டுமே படிவங்கள் காணப்படுகின்றன. இதனால் மொழி தெரியாதவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதேவிதமான பிரச்சினை நீதிமன்றங்களிலும் காணப்படுகின்றன. இதுவே பல வழக்குகள் தாமதாமவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
சிறிலங்காவின் உச்ச நீதிமன்றில் ஆங்கில மொழி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மாவட்ட நீதிமன்றங்களில் வழங்கப்படும் ஆவணங்கள் தமிழில் அல்லது சிங்கள மொழியில் காணப்படுகிறது. இது இந்த வழக்கு இடம்பெற்ற இடத்தில் பயன்படுத்தப்படும் மொழியைப் பொறுத்துக் காணப்படுகிறது. சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் கடமையாற்றிய ஒரேயொரு தமிழ் நீதியரசர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். தற்போது கடமையாற்றும் ஏனைய நீதியரசர்கள் ஆங்கில மொழியில் தங்கியுள்ளனர். ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றில் பணியாற்றும் 12 நீதியரசர்களில் மூவர் மட்டுமே தமிழ் மொழியைப் பேசக் கூடியவர்கள்.
காவற்துறையினரால் வழங்கப்படும் வாகனத் தரிப்புச் சீட்டுக்கள் மற்றும் வாகன அபராதக் கட்டணங்கள் போன்றன சிங்கள மொழியில் காணப்படுகின்றன. அரசாங்கத்தின் பெரும்பாலான சுற்றுநிருபங்கள் சிங்கள மொழியில் காணப்படுகின்றன. குடியகல்வுத் திணைக்களத்தால் மூன்று மொழிகளிலும் விண்ணப்பப் படிவங்களை வழங்கப்படுகின்றது. ஆனால் தமிழ் மொழி மூல விண்ணப்பப்படிவங்களை ஆராய்வதற்கான தமிழ் அதிகாரிகள் போதியளவில் காணப்படவில்லை. இதேபோன்று அவசர சேவைகளுக்கு தொடர்புகொள்ளும் போது கூட தமிழ் மொழியில் பதிலளிப்பதற்கு ஒருவரும் நியமிக்கப்படவில்லை.
அனைத்து பொதுமக்கள் தொடர்பு அலுவலகங்களிலும் இருமொழி தெரிந்த உதவியாளர்களை நியமிப்பதற்கும், அரச கரும மொழிக் கோட்பாட்டை மீறுவோர்களைத் தண்டிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அமைச்சர் மனோ கணேசன் விரும்புகிறார். இதேபோன்று வழக்கு விசாரணைகளின் போது சம்பந்தப்பட்டவர்கள் தமது சொந்த மொழியில் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய நீதிபதிகளை அமர்த்துவதற்கான அனுமதி தொடர்பாகவும் ஆராய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
மொழிக் கோட்பாடு சரியான வகையில் அமுல்படுத்தப்படுமானால் இது அரசியற் தீர்விற்கு உந்துசக்தியாக அமையும் எனவும் இதன் மூலம் போரின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது முதலில் ஆங்கில மொழியிலும் பின்னர் சிங்கள மொழியிலும் வெளியிடப்பட்ட போதிலும் இதன் தமிழ் மொழிமூல அறிக்கையானது இன்னமும் தயாரிக்கப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வழிமூலம் – The Economist
மொழியாக்கம் – நித்தியபாரதி