அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கான மருத்துவ செலவுக்காக அறவிடப்படும் தொகை பல வருடங்களுக்கு புதுப்பிக்கப்படாமலுள்ளது. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டவர்கள் நாட்டில் சிகிச்சை பெறும் போது அல்லது சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது அவற்றுக்கு தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை விட பன்மடங்கு குறைவான கட்டண அறவீட்டு முறைமையே அரச வைத்தியசாலைகளில் காணப்படுகிறது.
எனவே சுகாதார அமைச்சரால் அரச வைத்தியசாலைகளில் கட்டண அறவீட்டு முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இவ்விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது குறித்து இவ்வாரம் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்தல் பற்றி சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது தேசிய காப்புறுதி நிதியத்தின் மூலம் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் குறிப்பிடத்தக்களவு பிரஜைகள் வேறு சுகாதாரக் காப்புறுதி உத்தேசத் திட்டத்தின் மூலம் காப்புறுதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அத்துடன், அரச சுகாதார சேவைகள் முறைமையில் மேலதிக வசதிகளுக்குப் பதிலாக தனிப்பட்ட ரீதியாக கட்டணம் செலுத்தி குறித்த வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருசில பிரஜைகள் விருப்பத்துடன் உள்ளனர். அதற்கமைய, இலங்கைப் பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.