சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் இன்றையதினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ளதாவது,
இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர்.
நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள்.
தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை.
புத்தரையும் இயேசுவையும் முகமதுவையும் வழிபாட்டிடங்கள் அமைத்தே வழிபட வேண்டும்.
சைவர்களுக்கு தமிழர்களுக்கு நிலமே கோயில் நீரே கோயில் காற்றே கோயில் வானமே கோயில் நெருப்பே கோயில்.
எனவே தமிழர்கள் சைவர்களின் கோயில்கள் அரசுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல. எத்திசைச் செல்லினும் சைவர்களுக்கு அத்திசை கோயிலே.
வினை வழி கருவறையில் பிறந்து தெளிவு பெற்றவர்கள் போதித்தவர்கள் வழிவந்த மதங்கள் யாவும் இலங்கைக்கு வந்தேறி மதங்கள். அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய வழிபாட்டிடங்கள் அமைக்கும் மதங்கள்.
மேற்கத்திய மத மாற்றிகளின் பரப்புரை மதமாற்ற உத்திகளில் ஒன்று Planting Churches. ஆசிய ஆபிரிக்க நாடுகளில் மக்களிடையே Planting churches உத்தியைப் பயன்படுத்துமாறு கோடிக் கணக்கில் பணம் வழங்கும் மதமாற்றச் சபைகள் ஆலோசனை சொல்கின்றன.
அதே உத்தியை இலங்கையில் புத்த மத மேலாதிக்க வாதிகள் கடைப்பிடிக்கிறார்கள்.
புத்த மதத்தவர் குடியேற்றம், சைவ மக்களின் நிலம் அபகரிப்பு, தொல்லியல் போர்வை, இவை காரணங்களாக அமையத் தான்தோன்றியாக அமைந்த சைவக் கோயில்களின் அருகே புத்த கோயில்களை அமைக்கிறார்கள் திரு. சரத்த வீரசேகரர் உள்ளிட்ட புத்த மேலாதிக்க வாதிகள்.
இவர்கள் கேட்கிறார்கள், தென் இலங்கையில் அமைந்த சைவக் கோயில்கள் சட்டத்துக்குள் அமைந்தனவா? என.
நிலத்தையும் நீரையும் காற்றையும் வானையும் நெருப்பையும் வழிபடச் சட்டம் எங்கே தேவை?
அவற்றுக்கான குறியீடுகளான பாம்பும் வேம்பும் மயிலும் வேலும் சூலமும் சிவபெருமானும் பிள்ளையாரும் முருகனும் அமையச் சட்டங்கள் ஏன் தேவை?
புதிதாக வந்தவர் புத்தர். புதிதாக வந்தவர் இயேசு. புதிதாக வந்தவர் முகமது. இவர்கள் சார்ந்த வழிபாட்டிடங்கள் அமைக்கச் சட்டங்கள் தேவை.
படைத் துறையில் வல்லவராக இருப்பவர், தத்துவத் துறையில் வல்லவராக சட்டத் துறையில் வல்லவராக இருப்பதில்லை என்பதைத் திரு சரத்த வீரசேகரரின் கூற்றுகள் தெளிவாகக் காட்டியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.