உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீமின் கையடக்கதொலைபேசி பாகங்கள் வெளிநாடுகளின் புலனாய்வு பிரிவுக்கும் , பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் பாதுகாப்பு சபையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற போது , ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான சஹரான் ஹாசீமின் கையடக்க தொலைபேசி பாகங்கள் அமெரிக்க புலனாய்வு பிரிவினருக்கும் , பிரித்தானிய பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா அல்லது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இதற்கான ஆலோசனை வழங்கியது யார்? அரசாங்கமா ? ‘ என கேட்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , இவ்விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. எனினும் இவை தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.