அத்துகோரலவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி

80 0

2022 மே  9 ஆம் திகதி  காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகளின் போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் ஒருவருட கால நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கூடிய போது பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா முன்வைத்த  கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் இணக்கத்திற்கமைய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

2022.05.09 ஆம் திகதி காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தை தொடர்ந்து   அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மைனா கோ கம மற்றும் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்ட களத்தின் மீது ஒரு தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற அமரகீர்த்தி அதுகோரல நிட்டம்புவ பகுதியில் வைத்து ஒருதரப்பினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்,அவருடன் அவரது பாதுகாப்பு அதிகாரியும் கொலை செய்யப்பட்டார்.