இரண்டாண்டு காலத்தில் எண்ணிலடங்கா சாதனைகளை செய்துள்ள தமிழக அரசை பாராட்டுகிறோம் என்றுவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக இரண்டு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. இந்த திராவிட முன்மாதிரி ஆட்சிக்குகட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம் உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் கடன் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கும் பொருளாதார உறுதிநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியில் பின்தங்கி இருந்த மாவட்டங்களில் கூட ‘சிப்காட்’ வளாகங்கள் உருவாக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெறக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வேளாண் தொழிலுக்கு உரிய அக்கறை காட்டப்படுவதால் உணவுப்பொருள் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி சென்றிருக்கிறது. மாணவர்களுக்கு இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும், காலைசிற்றுண்டித் திட்டம் முதலான திட்டங்கள் பேருதவியாக விளங்குகின்றன.
பெண்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் குரலை மதித்து தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தைத் திரும்பபெறுவதாக அறிவித்தது பாராட்டுக்குரியது.
சமூகப் பிரிவினைவாதத்துக்கு எதிராக உறுதியோடு கருத்தியல் சமர் புரிவதிலும் நமது முதல்வர் முன்னணியில் நிற்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கும், எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமதர்ம நோக்கும்தான் திராவிட முன்மாதிரி ஆட்சியின் உள்ளீடு என முதல்வர் கூறியுள்ளார். இரண்டாண்டு காலத்தில் எண்ணிலடங்கா சாதனைகளை செய்துள்ள தமிழக அரசை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.