இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளதாலும், மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனம் போன்ற பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாலும், சுற்றுச்சூழலின் பாதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் 1978 அரசியலமைப்பானது சுற்றுச்சூழலை ஒரு அடிப்படை உரிமையாக நேரடியாகப் பார்க்கவில்லை என்றாலும், அது சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய பல ஏற்பாடுகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
அந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தினால் ஏற்பட்ட பேரழிவு குறித்து அண்மைய வாரங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்து வருகிறது.
பேர்ள் கப்பல் தீவிபத்தானது சுற்றுச்சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற் சூழல் , பொருளாதாரம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முழுமையான பாதிப்புக்கள் அளவிடப்படவில்லை.
கடலிலும் கரையோரப் பகுதியிலும் அதிகரிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த நைட்ரிக் அமிலம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் மாசுபாட்டைப் பொறுத்த வரையில், இலங்கைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவாகும்.
இவற்றால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் ஆரம்ப சுகாதாரத்தை வழங்குவது ஒரு அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளதாலும், மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனம் போன்ற பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாலும், சுற்றுச்சூழலின் பாதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து வருகிறது. இவ்விடயம் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுடன் நேரடி தொடர்பினைக் கொண்டுள்ளது.