காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குங்கள்

85 0

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் எதிர்வருங்காலங்களில் சிறப்பாக செயற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (08) கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தற்சமயம் கனேடிய அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்றன என்று அந்நாட்டின் சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைன் ஜெஹான் பெரேராவிடம் கேட்டறிந்துகொண்டார்.

அதற்குப் பதிலளித்த கலாநிதி ஜெஹான் பெரேரா தற்போது இலங்கையில் இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன பற்றி எடுத்துரைத்ததுடன், அந்த அலுவலகங்கள் தற்போது உரியவாறு முழுமையாக இயங்காத போதிலும், அவை உண்மையைக் கண்டறிவதை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட சிறந்த கட்டமைப்புக்கள் என்று சுட்டிக்காட்டினார். எனவே எதிர்வருங்காலத்தில் அக்கட்டமைப்புக்கள் சிறப்பானமுறையில் இயங்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு ஆதரவளிக்குமாறும் அவசியமான உதவிகளை வழங்குமாறும் ஜெஹான் பெரேரா நவீதா ஹுஸைனிடம் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று இலங்கையைப் பொறுத்தமட்டில் மொழிசார் கற்கைநெறிகளுக்கும், பயிற்சி வழங்கலுக்கும் கனேடிய அரசாங்கம் முன்னுரிமையளித்துவரும் நிலையில், அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்தும் அவதானம் செலுத்துமாறு கனேடியப் பிரதிநிதியிடம் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்தார்.

மேலும் மாகாணசபைகளைப் பலப்படுத்துவதை முன்னிறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும், அதற்கு அவசியமான கட்டமைப்புக்களை நிறுவுமாறும் அவர் கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனிடம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.