களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல பொலிஸ் குற்றப் புலனாய்வு குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
திங்கட்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறித்த சந்தேக நபர் தற்போது இனங்காணப்பட்டுள்ளார். அவர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த திருமணமானவர் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையை பெற்றுக்கொள்ள விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த இடத்துக்கு வருகை தந்த இருவர் மற்றும் அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து வந்த காரின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் அங்கு வந்த கார் தற்போது பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்வதற்காக 16 வயது சிறுமி பயன்படுத்திய தேசிய அடையாள அட்டை அவரது நண்பர் ஒருவரிடம் கோரப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை போலியான அடையாள அட்டையை முன்வைத்தாலும் உரிய முறையில் சோதனையிட்டிருந்தால் குறித்த சிறுமிக்கும் அடையாள அட்டைக்கும் பொருத்தமில்லை என்பது ஹோட்டல் ஊழியர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும். இருப்பினும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
இது குறித்தும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது கொலையா? என்ற அனுமானத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.