தமிழ்த்தேசியப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குத் தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் செவ்வாய்க்கிழமை (9) நடைபெறவுள்ள சந்திப்பு தொடர்பில் திங்கட்கிழமை (8) தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற திட்டமிடல் சந்திப்பின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (9) பி.ப 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலான திட்டமிடல் சந்திப்பொன்று திங்கட்கிழமை (8) மாலை 6 மணியளவில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (பாராளுமன்றக்குழுத்தலைவர் – தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு), தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இரா.சாணக்கியன், கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.
இப்பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:
‘தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானம் மேற்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களினதும், தமிழ்பேசும் மக்களினதும் சரித்திரபூர்வமான வாழ்விடங்கள் என்ற அடிப்படை நாட்டுக்குள்ளேயும், சர்வதேச ரீதியாகவும், இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓரலகாக உருவாக்கப்பட்டது.
எனவே அந்த அடிப்படைக்கு மாறாக எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை. எனவே இவற்றின் அடிப்படையிலேயே இன்றைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்’ என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.