அவலக்குரல்கள்! – இரா.செம்பியன்-

225 0

அவலக்குரல்கள்!
…………………………….

ஓங்கி எழுகின்ற அவலக் குரல்களின்
ஓசை இன்றும் கேட்கிறதே- அது
நீக்கமற நிலைத்து காலத்தால் நீள்கிறதே!
தாகம் தணியாத வேக நெருப்பாகி
நெஞ்சில் மூழ்கிறதே!
ஆண்டு பதின்நான்காய் பெருந்துயர் படர்கிறதே- நம்
ஆன்மாவை உலுப்பிய கணங்கள் தெரிகிறதே!

சல்லடை போட்ட சன்னங்கள் நடுவே
வெந்தணலில் வெதும்பிய உடலங்கள்!
செங்குருதிக் கறைகள் காயவில்லை- அவை
முத்தமிட்ட மண் மீண்டும் மீளவில்லை!
ஒப்பாரி ஓலங்கள் கேட்கிறது மனத்திரையில்- அது
வற்றாத கனதியினால் தவிக்கிறது!

இனப்பகை வன்மங்கொண்டே நசுக்கப்பட்டோம்- எமை
அழிக்கும் திட்டம் கொண்டே வதைக்கப்பட்டோம்!
வானம் பிளந்துவரும் குண்டுகளை எதிர்த்தே
வாழும் வயதினையும் மண்ணிலே புதைத்தோம்!
ஈனர் படைசூழ்ந்து இறுமாந்து நெரிக்கையிலே
தீயைக் குளித்துமே தேகமெரித்தோம்!
துள்ளும் எழில் வதனங்களைத் தொலைத்தே- நாம்
நித்தமும் செத்தோம் கணக்கின்றி!

சீற்றமுற்று வெஞ்சமராடிய வேங்கைகள் முன்னே
நேரெதிர் கொண்டு மோதிட முடியாப்பகை
கொன்று தின்றதே குழந்தைகளையும்!
இன்னும் வேண்டுமா உலகே உனக்கு ஆதாரம்- நீ
என்றுதான் புரிந்திடுவாய் எங்களின் ஓலம்.

– இரா.செம்பியன்-