கட்டானை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையை திறக்குமாறு வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
தமது தொழிலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடுமாறும் கோரியும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் கட்டானை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையின் உரிமையாளரான ஓமான் நாட்டை சேர்ந்தவர் மீது கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடியாட்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த ஆடை தொழிற்சாலை கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. 350 பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இந்நிலையிலே தொழிற்சாலை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.