வட மாகாண கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த கடற்படையினர் முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் ராஜாகுரூஸ் தெரிவித்தார்.
வட மாகாண கடற்பகுதியில் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துமாறு கடந்த ஆண்டு பலரும் கொடுத்த அழுத்தம் காரணமாக கடற்படையினர் நடவடிக்கை எடுப்பர் என்ற அச்சத்தினால் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத போதிலும் ஊடுவும் தொகை சற்றுக் குறைவடைந்திருந்தது.
ஆனால் தற்போது இந்திய இழுவைப்படகுகள் சர்வ சாதாரணமாக வடபகுதிக் கடலில் இறங்கித் தொழிலில் ஈடுபடுபடுவது மட்டுமன்றி எமது மீனவர்களின் வலைகளையும் அறுத்தெறிந்து விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக இன்றைய தினம் ( நேற்று ) எமது மீனவர்கள் பலர் தொழிலுக்கே செல்லவில்லை. முதல் நாள் சென்று வலையை கடலில் போட்டுவிட்டு எரிபொருளைச் செலவு செய்து மறுநாள் கடலிற்குச் சென்றால் இந்திய றோலர்கள் அப்பகுதியில் பெருந்தொகையில் தரித்து நிற்கின்றது.
இதனால் எமது மீனவர்கள் இரு தடவை எரிபொருள் செலவு செய்து சென்றும் வெறுங்கையோடு திரும்புவதோடு முதலையும் இழக்கும் நிலமையே காணப்படுகின்றது. இவ்வாறு இந்த ஆண்டில் அதிகரித்துக் காணப்படும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த வேண்டிய கடற்படையினர் வழமைபோன்று ஓர் இரு படகுகளை கைது செய்கின்றனர்.
இந்த ஆண்டில் இந்திய மீனவர்களின் அத்துமாறல் அதிகரித்தே கானப்படுகின்றது என்பதற்கு எடுத்துக் காட்டாக 2016ம் ஆண்டு முழுமையாக இலங்கை கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 252 ஆக இருந்தபோதிலும் இந்த ஆண்டின் முதல் 65 நாட்களில் மட்டும் 91 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 59 பேர் யாழ்ப்பாணக் கடற்பரப்பிலும் , 24 பேர் மன்னார் கடற்பரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளதோடு முல்லைத்தீவு கடற்பரப்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் ஊடுருவல் அதிகரித்துள்ளமைக்கு இதுவே ஓர் எடுத்துக் காட்டாகவே உள்ளது. இதனால் குறித்த விடயத்தினை உடனடியாக மீன்பிடி அமைச்சு கவனத்தில் எடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தி உள்ளூர் மீனவர்களின் வாழ்வியலை உறுதிப்படுத்துமாறு கோருகின்றோம். ஏனெனில் வட மாகாண கடலில் தற்போது மீன் பிடிபடுவது குறைவடைந்து மீனவரும் கஞ்சாவுமே பிடிபடுகின்றமை துரதிஸ்ட வசமானது. என்றார்.