அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆகவே அமைச்சு பதவி தொடர்பில் தொடர்ந்து வலியுறுத்த போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்தோம்.
நிலையான அமைச்சரவை,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் ஆகியன தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.அதன் பின்னர் அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை. இனியும் வலியுறுத்த போவதில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கிறது.இருப்பினும் பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவை தோற்றம் பெறவில்லை.அமைச்சு பதவி தொடர்பில் அழுத்தமாக வலியுறுத்தவில்லை.அதற்கான அவசியமும் இல்லை.
அமைச்சு பதவிகளை காட்டிலும் கட்சியை வலுப்படுத்துவதற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். மக்களாணையுடன் நாங்கள் மீண்டும் ஆட்சியமைப்போம்.அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.