தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு தாம் பொறுப்பல்ல என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே இதனை தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் எந்தவொரு தருணத்திலும் கடற்படை தளபதியின் அனுமதியின்றி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் கடற்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுமாயின் அது குறித்து பொது வான்சேவை அதிகார சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
கடற்படையினர் சிறிய படகுகளில் பிரவேசித்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இலங்கை கடற்படையினர் வசமுள்ள சிறிய ரக படகுகள் பயணிகள் போக்குவரத்துக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே தெரிவித்துள்ளார்.
எனவே இந்த துப்பாக்கி சூட்டை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழக செய்திகளின்படி நேற்றிரவு இந்திய கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒன்பது பேரைக் கொண்ட படகு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 22 வயதான ராமேஷ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் சாவடைந்ததாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த வேளையில் சுமார் 2 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சாவடைந்த தமிழக கடற்றொழிலாளரின் உடலத்தை ராமேஸ்வரம் மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்வதற்கு கடற்றொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உத்தரவாதத்தை பெற்று தர வேண்டும் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.