2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா கோவில்குளம் கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பட்டானிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.
2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டானிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83 (1) இன் பிரகாரம் அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடனடியாக அகற்றுமாறு கட்டளை இடப்படுகின்றது.
அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் , கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், அரசாங்க அதிபர் , கொழும்பு கமநல திணைக்கள ஆணையாளர் நாயகம் , பொலிஸ் அத்தியஸ்தகர் , பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாவும் கட்டிடங்கள் அனுமதி வழங்காமல் இருப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வவுனியா நகரசபை செயலாளருக்கும் , பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வவுனியா பொலிஸ் நிலை பொருப்பதிகாரிக்கும், குறித்த வேலியினை அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கமநல சேவை நிலையம் கோவிற்குளத்திற்கும் , பட்டானிச்சூர்புளியங்குளம் கிராம சேவையாளருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.