ஊடக அறிக்கை
08.05.2023
‘இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும்
அரசியல் உரிமையும்’ – ஒரு நாள் மாநாடு
ஐக்கிய இராச்சியத்தில் இவ்வாண்டு கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இம்மாதம் 15ம் திகதி திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
ஈழத்தமிழர் தமது தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி சுயாட்சிக்கான தேசத்தை உடையவர்கள் என்பதனை அங்கீகரிக்குமாறு ஐநாவை வேண்டுவதுடன், இதனை வலியுறுத்துமாறு உலக நாடுகளிடம் குறிப்பாக பிரித்தானிய அரசைக் கோருதல் இம்மாநாட்டின் முதன்மையான நோக்கமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு நீதிகோருவதுடன் போர் முடிவுற்ற பின்னரும் தமிழினவழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சிறிலங்கா அரசை, அனைத்துலக மட்டத்தில் விலக்கிவைப்பதற்கு சனநாயக வழிகளில் போராட ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக வீறுகொண்டு எழுந்துள்ளனர் என்பதனை உலகிற்கு பறைசாற்றுவதும் இம் மாநாட்டின் குறிக்கோள்களில் அடங்கும்.
சிறிலங்காவில் நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழர் தேசத்திற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும், 13ம் திருத்தச் சட்ட மூலத்தினை அரசியற்தீர்வின் ஆரம்பப்புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் இம்மாநாடு வலியுறுத்தவுள்ளது. மூலோபாய ரீதியில் முக்கியம் பெறும் தமிழர் தாயகப்பகுதிகளை மையப்படுத்தி நிகழும் பூகோள அரசியற் போட்டியினால் எழுந்திருக்கும் கருத்துக் குழப்பங்களுக்கு தெளிவினை ஏற்படுத்தி, தமிழ்மக்கள் எழுச்சிமிக்கவர்களாக ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வலுச்சேர்ப்பதாக இம்மாநாடு அமையும்.
தமிழர்களின் அரசியல் வேணவாவை உறுதிபட ஒரே குரலில் வெளிப்படுத்தவும், தாயகத்தில் வாழும் தமிழ்மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு உதவுவதற்காகவும், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராச்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி முறைமையை முற்றாக நிராகரித்து 1977ம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்காவின் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அரசியற்தீர்வை அடையும் நோக்கில் ஈழத்தமிழர் பேரவை பணிகளை மேற்கொள்ளும்.
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் மக்களவைகளின் கூட்டமைப்பான அனைத்துலக ஈழத்தமிழரவையில் அங்கம் வகிக்கும் அமைப்புகளுடனும், மேற்படி அரசியல் அடிப்படைகளை ஏற்றுச் செயற்படும் ஏனைய தமிழ் அமைப்புகளுடனும், இதர தோழமை அமைப்புகளுடனும் ஈழத்தமிழர் பேரவை இணைந்து பணியாற்றும்.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 10ம் நாளுக்குள் நிகழ்வுக்கு வருகை தருவதற்காக முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமையளிக்க ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.
ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராச்சியம்