தேசிய எல்லை நிர்ணயக்குழுவின் முழுமையான அறிக்கையை இம் மாதத்துக்குள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி எல்லை நிர்ணய குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எல்லை நிர்ணய குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பிரஜைகளுக்கு தமது பரிந்துரைகளையும் , யோசனைகளையும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இதுவரையில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் சுமார் 400 முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய எல்லை நிர்ணயக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள முன்மொழிவுகள் குறித்த மதிப்பாய்வுகள் விரைவில் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் சமூகத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள இந்த முன்மொழிவுகளும் உள்வாங்கப்படவுள்ளன.
அதற்கமையவே இறுதி அறிக்கையை இம்மாதத்துக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.