2 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு வேதனைகளை அனுபவிக்கின்றனர்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

84 0

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து ஆட்சியைப் பிடித்த திமுகவால், கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால், மாதம் ஒருமுறை மின் கட்டணம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளனர். கரோனா தாக்கத்தில் இருந்து மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படாது என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, ஒரே ஆண்டில் சொத்துவரியை பலமடங்கு உயர்த்தியதுடன், ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். மேலும், குடிநீர் வரி, ஆவின் பால் விலை என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. நகைக் கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்தவர்களில், 75 சதவீதம்பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று அறிவித்து விட்டனர். டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மொத்தத்தில், தமிழர் நலன்களையும், உரிமைகளையும் திமுக அரசு பாதுகாக்காது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர். இவ்வாறு அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.