ராணி கமீலாவுக்கு ஆடை வடிவமைத்த மே.வங்க பெண்

85 0

 இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ராணி கமீலா பார்க்கர் அணிந்திருந்த ஆடைகளை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா மாலிக் வடிவமைத்துள்ளார். மேலும் மன்னர் 3-ம் சார்லஸின் ஆடைகளில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அலங்கார ஆடைகளையும் பிரியங்காதான் தயாரித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா மாலிக் (வயது 29) கூறியதாவது: இங்கிலாந்து மன்னரும், ராணியும் நான் வடிமைத்த ஆடைகளை அணிந்துள்ளனர் என்பதே எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் எனது ஆடை மற்றும் புரூச் டிசைன்களை பார்த்துஅவர்கள் பாராட்டினர் என்பதை அறிந்தபோது எனக்கு ஒரு நம்பமுடியாத உணர்வு ஏற்பட்டது.

இதுதொடர்பான பாராட்டுக்கடிதம் இங்கிலாந்திலிருந்து கிடைத்ததும் பரவசமடைந்தேன். அரண்மனையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்ததே எனக்கு மிகப்பெரிய விஷயம். விழாவில் பங்கேற்க எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால் எனது உடல்நிலை காரணமாக அங்கு செல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்கா மாலிக், இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் ஆடை வடிவமைப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை படித்துள்ளார்.